Wednesday, 6 April 2016

A song in Bilahari on mental worship citing Thirumayilai Vaayilaar and Thiruninravoor Poosalar

Song 45: 21/03/16: Written after seeing (quite by chance) a live telecast of Mylapore Ther festival
ராகம்: பிலஹரி

ஆலயம் தொழுவது சாலவும் நன்று1 - மன
ஆலயம் தொழுவது2 அதனினும் நன்று                (ஆலயம் தொழுவது)

மயிலாலும் புன்னைசூழ்3 கயிலையாம்4 பதியில்
தனியாக அமர்ந்த வாயிலார்5 போல் நமக்குள் (ஆலயம் தொழுவது)

6மறவாமை என்பதே அரனுறைக் கோவிலாய்      
உறவால் ஏற்றிடும் சுடரொளி விளக்காய்       
குறைவிலா ஆனந்தமே திருமஞ்சன நீராய்     
மறைமுதலோனுக்கு அன்பே அமுதமாய்          (ஆலயம் தொழுவது)

காடவர் கோன்7கலைக் கோவிலைத்8 துறந்து
நாடவர் கண்டிராத்9 திருநின்றவூர் பூசலான்
உள்மன உறைவிடம் விரும்பிய10 அண்ணலின்11  
ஒள்ளொளி12 வெள்ளத்தி லிரண்டறக் கலந்திட    (ஆலயம் தொழுவது)

குறிப்பு
1.        பாடலின் முதல் வரி ஔவையாரின் 'கொன்றை வேந்தன்' செய்யுளின் இரண்டாவது வரி.
2.        மனத்தையே கோயிலாகக் கொண்டு வழிபாடு செய்தல்
3.        மயில்கள் ஆடும், புன்னை மரங்கள் சூழ்ந்த திருமயிலை
4.        கயிலையே மயிலை, மயிலையே கயிலை என்று சொல்வது வழக்கம்
5.        வாயிலார் நாயனார் திருமயிலையில் அவதரித்தவர். மானசீக வழிபாட்டிற்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர். திருமயிலை கபாலீஸ்வரர் கோவிலில் இவருக்கு ஒரு தனி சன்னதி உள்ளது
6.        சேக்கிழாரின் பெரிய புராணத்தில், வாயிலார் கதையைக் கூறும் செய்யுள்:  
                                                                                                        (Translated by Sri T.N. Ramchandran)
Rearing within a mental shrine of un-forgetfulness,
He lit the lustrous lamp of godly consciousness;
Immortal bliss constituted his ablutions to the Lord;
He offered unto the Lord of Dharma, the nectarean food
Of his love; thus, even thus, he did his pooja.  



7.        காடவர்கோன் என்பது பல்லவ அரசனான  இராஜசிம்மனின் பெயர் (இரண்டாம் நரசிம்மவர்மன் ஆட்சிக் காலம் கி.பி. 700-728)
8.        அவன் எழுப்பிய கைலாசநாதர் கோவில் காஞ்சிபுரக் கோவில்களில், பல்லவர்கள்  சிற்பக்கலையில் எட்டிய மேன்மையைப் பறைசாற்றுகிறது.
9.        கைலாசநாதர் கோவில் கட்டி முடித்து அதைத் திறக்கும் முதல் நாளிரவு அரசன் கனவில் வந்த ஈசன், தான் திருநின்றவூர் பூசலார் கட்டிய கோவிலுக்குச் செல்வதால்  காஞ்சிக்கு  வர இயலாது என்று கூறினாராம். அரசனும் வியப்பு மேலிட திருநின்றவூர் சென்று விசாரித்தால் அங்குள்ள மக்களுக்கு, பூசலார் கட்டும் (மனக்) கோவிலைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. அதனால் "நாடவர் கண்டிரா"
10.      பெரும்பொருள் செலவிட்டு மிக நேர்த்தியாகக் கட்டப்பட்ட அரசனின் கோவிலை விட அன்பன் பூசலாரின்  மனக்கோவிலில் குடியேறுவதையே பரமேஶ்வரன் விரும்பினான்
11.      பரமசிவன்
12.  மிகுந்த ஒளி; சோதி வடிவானப் பரசிவ வெள்ளம்  

No comments:

Post a Comment