Saturday, 19 September 2015

A song on Thorana Ganapathi in Sringeri

Composed on 30/03/15
ராகம்: நாட்டை    

(ப)    தோரண கணபதி தருவான் நன்மதி
ஆரணப் பொருளின் வடிவாம் பெருநிதி (தோரண)

(அ.ப) வாரண முகவன் தந்தம் இளமதி
பூரண அறிவின் உறைவிடம் கஜபதி (தோரண)

(ச)    சாரதர் தலைவன் களைவான் நம்விதி
நாரதர் கனிபெற சிவனுமை சுற்றி
பாரதம் எழுதிட முனிவருக் குதவி
சாரதைக்   கோவில் வாயிலில் வீற்றி (டும்) 

குறிப்புகள் மற்றும் அரும்பதவுரை:
தோரண கணபதி : ஜகத்குரு ஸ்ரீ (வ்ருத்த) ந்ருஸிம்ஹ பாரதீ (1798 - 1879) (பாகற்காய் சாமியார்) ஒரு சமயம் மடத்தின் பிரச்சனை ஒன்றை யோசித்துக் கொண்டிருக்கும்பொழுது அவர் மனக்கண்ணிற்கு சாரதாம்பாள் கோவில் கதவின் தோரணத்தில் செதுக்கப்பட்டுள்ள  கணபதியின் உருவம் தோன்றியவுடன், அவரால் அப்பிரச்சனையை எளிதில் தீர்க்க முடிந்தது.  காணாபத்யம் என்கிற விநாயகர் வழிபாட்டை அறுசமயங்களில் முதலாவதாக வைத்த ஆதி சங்கரரின் குருபரம்பரையில் வந்தவருக்கு இப்படி நடந்தது இயற்கையே. அந்த நாள்முதல் தோரண கணபதி சிருங்கேரியில் சிறப்பாக வழிபடப் படுகிறார். 
நன்மதி: நல்ல புத்தி
ஆரணம்: வேதம், ஆரணப் பொருள்: ஓம் என்ற பிரணவ மந்திரம்.
கணபதியின் வளைந்த வடிவே வடமொழி, தமிழ் இரு மொழிகளிலும்  ஓம் என்ற எழுத்தைப்போல் உள்ளது.  கணபதியே பிரணவ மந்திரத்தின் உருவம். ஓம்காரஸ்வரூபனாக விளங்குகிறவனை ‘ப்ரணவஸ்வரூப’ என்று முத்துஸ்வாமி தீக்ஷிதர் 'வாதாபி கணபதிம்' என்ற கிருதியில் சிறப்பிக்கிறார்.
பெருநிதி: கணபதியின் பெரிய வயிறு (லம்போதர), பெரிய உரு (மஹாகாய) இவை எல்லாம் வெறும் உடலை மட்டும் குறிப்பதாகக் கருதலாகாது. அளப்பரிய நற்குணங்களின் மிகுதியையே சுட்டுகின்றன என்பது சான்றோர் கருத்து. கல்விச் செல்வம், பொருட்செல்வம் அனைத்தும் அவனிடம் அடக்கமாவதால் “நிதீச்வரன்” என்று 108 நாமங்களில் போற்றப் படுகிறான்.
வாரண முகவன்: யானை முகம் உடையவன்
தந்தம் இளமதி: சந்திரனின் இளம்பிறை போன்ற தந்தம். திருமந்திரத்தின் காப்புச் செய்யுளில் "ஐந்து கரத்தனை, யானைமுகத்தனை, இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை" என்று திருமூலர் கூறுவதை ஒப்பிட்டு நோக்குக. பாலசந்த்ரன் என்பதே அவன் திருநாமங்களில் ஒன்று
பூரண அறிவின் உறைவிடம்: விஷய ஞானம் என்பது அறிவின் முதற்படி. ஆத்ம ஞானம், ப்ரஹ்ம ஞானம் என்பவை அறிவின் அடுத்தடுத்த மேற்படிகளாகும். இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியதே பூர்ண ஞானம் எனப்படும் முழு அறிவு. பூரண அறிவின் கடவுள் ("புத்திநாத") அதனை அனைவருக்கும் அளிப்பதால் "புத்திதாத"னாகத் திகழ்கிறான்.
சாரதர் தலைவன்: பூதகணங்களின் தலைவன்

No comments:

Post a Comment