Wednesday, 2 September 2015

Colours of Krishna

25/07/15
ராகம்: ஹிந்தோளம்

கண்ணன் வண்ணம் இன்னதென்று
திண்ணமாகச் சொல்வார் எவரோ?

கண்ணில் காணும் நிறங்கள் எல்லாம்
புண்ணியன் மேனியில் உள்ளன அன்றோ?

திரைகடல் நீலம், மழைமுகில் கருமை,
வரைவனப் பசுமைப் பவளவாய்ச் செம்மை 
அரைதுகில் மஞ்சள், கைச்சங்கம் வெண்மை
அரைகுறை யாகவே விளக்கும் ஒப்புவமை

மணியின் வண்ணன் அருக்கன் ஒளியோன்
அணியும் துளபம் சுடர்விடு ஆழியோன்
அணி1சேர் மார்வன் அழகினை இயம்ப
அணி2யும் உவமையும் பயனில மொழியில்

உரை
வரை: மலை. மலைகளின் வனங்கள் அவற்றிற்குப் பச்சை நிறம் அளிக்கின்றன.
              (ஒப்பு நோக்குக) பச்சை மாமலை போல் மேனி (தொண்டரடிப்பொடியாழ்வார்)
அரைதுகில் மஞ்சள்: இடுப்பில் விளங்கும் பீதக ஆடை
அருக்கன்: சூரியன். (ஒப்பு நோக்குக)
திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று  (பேயாழ்வார்)
துளபம்: துளசி
ஆழி: சக்கரம் 
அணி1: நகை, அழகு, திருமகள்: மார்வன்: மார்பில் மார்பில் உடையவன்

அணி2 : சொற்களை அலங்காரப்படுத்த உதவுவது

No comments:

Post a Comment