Wednesday, 2 September 2015

Meenakshi thaalaattu

One of my friends asked me "why are most thaalaattu songs sung for boy babies like Krishna, Rama or Murugan. Is there nothing for a girl baby?". So I composed this piece of thaalaattu in Aananda Bhairavi.  Check out the audio at the following link

https://onedrive.live.com/redir?resid=467EBA89D7C571FB!37187&authkey=!AGeqVyjIgCuvHFk&ithint=file%2cwav

Completed on 4/8/15
மீனாக்ஷி தாலாட்டு               ராகம்: ஆனந்த பைரவி

நான்மாடக் கூடல் நகர்
கோன்வாழும் மாளிகையில்
மீனாட்சியாம் செல்ல மகள்
கண்வளரத் தாலேலோ

ஆணிப் பொன் தொட்டிலிலே
மாணிக்கக் கரங்களினால்
ராணி காஞ்சனமாலை
ஆட்டுகிறாள் தாலேலோ

மரகதம் போல் பசுமேனி
அரதனம் போல் சேவடிகள்
இரதனம் ஒலிகிண் கிணியும்
         ஆடிடுமே தாலேலோ

பறை முழங்கப் பரியேறிப்
பிறை சூடியின் வெள்ளை
வரை வெல்லப் போவாளே
         தடாதகையே தாலேலோ

செங்கண்மால் அண்ணனும் 
அங்கயற்கண்ணி இவளை
சங்கர சுந்தரேசர்க்கு
மணம் செய்வான் தாலேலோ

இமையாரும் வணங்கும்
இமைப்போர்க்கும் அருளும்
இமையாக்கண்  கொண்ட
        கயல்விழியே தாலேலோ

அரும்பதவுரை
நான்மாடக் கூடல் நகர்: மதுரை, கோன்: மலயத்துவச பாண்டிய மன்னன், மீனாட்சியின் தந்தை,
ஆணிப் பொன்: மேன்மையான தூய்மையான தங்கம்,     காஞ்சனமாலை: மீனாட்சியின் தாய்,
அரதனம்: இரத்தினம்,    இரதனம்: அரைஞாண்,   பறை: போர் அறிவிக்கும் ஓர் இசைக் கருவி,
பரி: குதிரை,    பிறைசூடி: சந்திரனை முடியில் சூடிய சிவன்,
வெள்ளை வரை: வெண்ணிற மலையான கயிலை,
தடாதகை: மலயத்துவச பாண்டியன் தன் மகளான மீனாட்சிக்கு வைத்த பெயர்,
செங்கண்மால்: திருமால்,  அங்கயற்கண்ணி: அழகிய மீன் விழியாள்,
இமையார்: கண்ணிமைக்காதவர் அதாவது வானவர்,  தேவர்கள்,
இமைப்போர்: மனிதர்,  இமையாக்கண்  கொண்ட:  எப்படி மீன்கள் கண்களை இமைப்பதில்லையோ அதே போல் மீனாட்சியும் இமைகளைக் கணப் பொழுதும் மூடாமல் பக்தர்களுக்கு விழியாலே அருள் பாலிக்கிறாள்,.

கயல்விழி: மீனாட்சி

No comments:

Post a Comment