Saturday, 19 September 2015

Natural beauty of Sringeri and a legend related to Sringeri as a song

April 2015
ராகம்: பெஹாக்

சிருங்கேரியின் சிறப்பு

(ப)    காலணிச் சலங்கையின் நாதம் நின்றதேன் ?
காலடி சங்கரர்  உளமும் நெகிழ்ந்ததேன் ?      (காலணி)

(அ.ப) உபயபாரதி வடிவினள் ஸரஸ்வதி
துறவியைத் தொடர்ந்த சாரதை தேவி         (காலணி)

(ச.1)   மலை நாட்டின்வன ஸௌந்தர்யம் கண்டா ?
பகை விலங்கும் காட்டும் பரிவைக் கண்டா ?
கரை புரண்டோடும் துங்கையின் கானமா ?
மறை முனி பண்டு ஓதிடும் வேதமா ?        (காலணி)

(ச.2)   கார்மேகம் காட்டும் உன் மாமனின் நிறமா ?
சார்ங்கமாய்ப் பொழியும் மழையின் திடமா ?
வார்குழல் கலைக்கும் வாயுவின் வேகமா ?
பார்படைக் கணவன் பிரமன்கைத் திறமா ?    (காலணி)


உரை
மஹிஷ்மதி என்ற ஊரில் ஸ்ரீ ஆதி சங்கரர், மண்டன மிச்ரரையும், அவர் மனைவியான உபயபாரதியையும் வாதத்தில் வென்றதால் அவர்கள் சங்கரரின் சீடர்கள் ஆனார்கள். ஸரஸ்வதி தேவிதான் உபயபாரதியின் உருவில் வந்ததாகக் கருதப் படுகிறது.  தான் பின் தொடர்ந்து வருவதை, சங்கரர் திரும்பிப் பார்க்கக்கூடாது, தன் காற்சலங்கையின் ஒலி மூலம் மட்டும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஏற்பாடு ஆயிற்று.சங்கரர் திரும்பிப் பார்த்தால் அந்த இடத்திலேயே, தங்கிவிடுவேன் என்று பாரதி நிபந்தனை விதித்தாள்.

அவர்கள் சிருங்கேரி வருகையில், திடீரென்று சலங்கை ஒலி நின்றதும் சங்கரர் திரும்பிப் பார்க்க அங்கேயே சாரதை குடி கொண்டுவிட்டாள். அந்தத் துறவியும் தேவியும்  சிருங்கேரியில் தங்கியதின் காரணத்தை கற்பனை செய்ததில் பிறந்த பாடல் தான் இது.

(இந்நிகழ்சி, துங்கை நதியும் பத்ரை நதியும் சங்கமாகும் 'கூடலி' என்ற இடத்திலும் நடந்ததாகக் கூறப்படுகிறது.)

இயற்கை  அழகு கொஞ்சும் பூமியான சிருங்கேரியைச் சூழ்ந்த மலை முகடுகளையும், நெடுமரக் காடுகளையும் கண்டு பிரமித்து நின்றாளோ ?

ஜன்மப் பகையான பாம்பு, வேதனையில் இருந்த தவளைக்கு, வெய்யிலில் மேலும் தவிக்காமல் காக்கப் படமெடுத்து, குடையாய் நின்ற இடம்;   புலியும் பசுவும், சிங்கமும் ஆடும் ஒற்றுமையாய் விளையாடும் தலம் சிருங்கேரிஇக்காட்சிகள், அத்வைதி சங்கரருக்கு, எல்லா உயிரிலும், எல்லாப் பொருளிலும் இரண்டறக் கலந்து விரவியுள்ள மூலப் பரம்பொருளை நினைவூட்டியதோ ?

நுரைத்துக் குமிழ் விட்டு ஒய்யாரமாக ஓடி வரும் துங்கா நதியின் இன்னிசை தன் விபஞ்சி வீணையின் நாதத்தை விஞ்சுவதாக எண்ணி அந்த இசைவாணி திகைத்தனளோ  ?

(பண்டு) ராமாயண காலத்தில், (மறைமுனி- வேத வித்தான)  ரிஷ்யச்ருங்க முனியின் ஆச்ரமம் இருந்த இடம்  சிருங்கேரி.  அவர் அன்று செய்த வேத கோஷம், இன்றும்  நாத உருவாய் காற்றில் கலந்துளதை உணர்ந்து வாக்தேவியும், வேதங்களின் ஞான காண்டத்தின் பெருமையை உலகத்தில் மீண்டும் நிலை நாட்டிய ஆதி சங்கரரும் வியந்து நின்றனரோ?

கருத்த மேகங்களின் நிறம், ஸரஸ்வதியின் கணவன் பிரம்மாவின் தந்தையான திருமாலின் (அவளுடைய மாமனார்) நிறத்தை ஒத்துள்ளதால் அவரை வணங்க நின்றனளோ ?

 மஹாவிஷ்ணுவின் வில்லான சார்ங்கத்திலிருந்து இடைவிடாது பொழியும் அம்புகளைப் போல் சிருங்கேரியில் மழை பொழிவது அவர்தம் நீர்மையை (ஸௌசீல்யம்) நினைக்கத் தூண்டியதோ ? {தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை (ஆண்டாள்)} 

மலைநாடான காச்மீர புரத்திலிருந்து வந்த ஸரஸ்வதிக்கு, சிருங்கேரியின் குளிர் காற்றும் மலை வனங்களும் தன் சொந்த ஊரை ஞாபகமூட்டியதோ ?  

உலகங்களைப் படைத்த தன் கணவன் (பார்படைக் கணவன் ) பிரும்மாவின் (பிரமன்) கைத்திறனை சிருங்கேரியில் கண்டு அதிசயித்து நின்றாளோ ?


 (குறிப்பு: காச்மீர தேசத்தில் சாரதா பீடத்தின் தென் வாயிலை ஞான வாதத்தால் திறந்து ஸர்வக்ஞ பீடத்தில் ஆதி சங்கரர் அமர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த இடம் தற்போது பாகிஸ்தான் ஆக்ரமித்த காச்மீரில் உள்ளது.  காச்மீரிலிருந்து அவர் கொண்டு வந்த சந்தன மர உருவ சாரதையைத் தான், கல்லில் ஸ்ரீசக்ரம் வரைந்து சிருங்கேரியில் பிரதிஷ்டை செய்தார். இவ்வுருவத்தை இன்றும் சிருங்கேரியில் ஸ்ரீ வித்யாசங்கரர் கோவிலில் காணலாம்.)

No comments:

Post a Comment