Thursday, 3 September 2015

Thirukkovalur Song



Composed on 07-07-15 while travelling on Thirukkovalur bypass road
ராகம்: குந்தலவராளி                                             தாளம்: ஆதி
திருக்கோவலூர் பாடல்
கொண்டல் வண்ணனே கோவல் மணாளனே
கொண்டேன் ஆவலுன் இரகசிய மறியவே              (கொண்டல்..)

மாவலி வேள்வியில் மூன்றடி கேட்டுநீ
தாரணி யளக்கு முருவாய் விரிந்தனை                (கொண்டல்..)

காரிருள் கவிந்து வானம் பொழிந்திடும்
ஓரிரவில் சிறு தேகளி நடையில்
சீரியர் மூவரின் தமிழ்ப்பா கேட்கநீ
ஆரிய உருவாய் எங்ஙனம் சுருங்கினை?               (கொண்டல்..)

கன்னல் வயற்சூழ்க் கோவலூர் ஆயனே
முன்னம் ஆலிலைக் கிடந்த மதலையாய்
தன்னக மீரேழ் அண்டமு மடக்கினை
பன்னக சயனனே பகர்நின் மாயையை                 (கொண்டல்..)

பகுபதவுரை
ஆவலுன் = ஆவல் உன்; இரகசிய மறியவே = இரகசியம் அறியவே; தாரணி யளக்கு முருவாய் = தாரணி அளக்கும் உருவாய்; வயற்சூழ் = வயல் சூழ்; தன்னக மீரேழ் அண்டமு மடக்கினை = தன்னகம் ஈரேழ் அண்டமும் அடக்கினை 
பதவுரை
கொண்டல் வண்ணன் = மேக நிறமுடையவன்
கோவல் மணாளன் = திருக்கோவலூரில் உள்ள தாயார் பூங்கோவலின் கணவன்
மாவலி = மகாபலி
தாரணி = உலகம் 
தேகளி = இடைகழி, வீட்டின்  முன் பகுதியில் உள்ள  நடை
சீரியர் மூவர் = தமிழ்ப் பெரியோரான முதலாழ்வார்கள் மூவர்: பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்
ஆரிய உரு = மிகச் சிறிய உரு
கன்னல் = கரும்பு
ஆயன் = திருக்கோவலூர் பெருமாளின் திருநாமம்
முன்னம் = முன்பு ஒரு நாள், அதாவது பெரும்பிரளய காலத்தில்
ஆலிலைக் கிடந்த மதலை = பிரளயத்தால் உலகங்கள் அழியும்போது. ஒரு ஆல மரத்து இளந்தளிர் இலையில் வட பத்ர சாயியாக, பால முகுந்தனாக படுத்துக் கிடந்த நாராயணன்
தன்னக மீரேழ் அண்டமு மடக்கினை = அப்பாலகனின் வயிற்றில் 14 உலகங்களும் அடங்கிக் காப்பாற்றப்பட்டு, மீண்டும் அவன் அவற்றை உமிழ்ந்து உயிர்ப்பித்ததாகப் புராணம்
பன்னக சயனனே = ஆதிசேஷன் என்ற பாம்பில் படுப்பவன்

பகர்நின் மாயையை = உன் மாயத்தின் இரகசியத்தைக் கூறு

No comments:

Post a Comment